டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு


டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
x
தினத்தந்தி 13 Nov 2025 12:03 PM IST (Updated: 13 Nov 2025 2:06 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தை பின்தொடர வழிவகுத்தது. போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனிடையே காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் மீண்டும் சமூக விரோத செயல்களை தொடரும் முனைப்பில் இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து அந்த அமைப்பினர் தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக குல்காம், புல்வாமா, சோபியான், பாரமுல்லா மற்றும் கண்டர்பெல் மாவட்டம் உள்ளிட்ட 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நேற்று ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்கள் சிக்கின. மேலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பலரிடம் விசாரணையும் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாத சூழல் அமைப்பையும் அதன் ஆதரவு கட்டமைப்பையும் அடிமட்ட அளவிலேயே அகற்றுவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்ததாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன. குண்டு வெடித்த இடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அசிப் அலி சாலையில் உமர் முகமது நடந்து செல்லும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

இதுதொடபாக டெல்லி போலீசாரிடம் சுமார் 50 இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் உள்ளன, அவை டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி டாக்டர் உமர் நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை வளாகத்தை அடைவதற்கு முன்பு டெல்லியின் பல பகுதிகள் வழியாக பயணம் செய்ததைக் காட்டுகின்றன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி போலீசாரின் வரைபடத்தின்படி, குண்டுவெடிப்பு குற்றவாளி பிற்பகல் 3 மணிக்கு முன்பு டெல்லியின் பல பகுதிகள் வழியாக அந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் டாக்டர் உமர் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளார். ஆதாரங்களின்படி, பரிதாபாத்தில் இருந்து பயணித்தபோது தென்கிழக்கு மாவட்டத்தில் பல இடங்களில் அவர் முதலில் காணப்பட்டார். அவர் பதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்தார். தென்கிழக்கு மாவட்டத்திலிருந்து, அவர் கிழக்கு மாவட்டத்திற்கும், பின்னர் மத்திய மாவட்டத்தின் ரிங் ரோட்டிற்கும் சென்றார்.

அங்கிருந்து, அவர் வடக்கு மாவட்டத்திற்குச் சென்றார், அதைத் தொடர்ந்து வடமேற்கு மாவட்டத்தில் உள்ள அசோக் விஹார் சென்றார், அங்கு அவர் சாப்பிட நின்றார். அங்கிருந்து, அவர் மத்திய மாவட்டத்திற்குத் திரும்பினார், அங்கு அவர் ஒரு மசூதியைப் பார்வையிட்டார், மேலும் அவர் பிற்பகல் 3:19 மணிக்கு வடக்கு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தை அடைந்தார்.

மேலும், பரிதாபாத்தில் இருந்து தப்பித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் உமர் மேவாட் வழியாக பிரோஸ்பூர் ஜிர்காவை அடைந்தார். பின்னர் அவர் டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார் என்று போலீஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

1 More update

Next Story