இந்தியாவை வெறுப்பதும், தீங்கு விளைவிப்பதும் பாகிஸ்தானின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி

நமது சகோதரிகளின் சிந்தூரை துடைக்க துணிபவர்களுக்கு தங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத்,
குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது நாடு வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது. நமது சகோதரிகளின் சிந்தூரைத் துடைக்கத் துணிபவர்கள் தங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி அதிகாலையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியாவின் மீதான வெறுப்பை உமிழ்கிறது. அது பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க மட்டுமே விரும்புகிறது. இருப்பினும், இந்தியாவின் இலக்குகள் வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதே ஆகும்.
ஹோலி, தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், பொம்மைகள், ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற, இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






