

பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உபகார் லே-அவுட் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவர், இரவு 7 மணியளவில் தான் வளர்த்து வரும் நாயை நடைபயிற்சிக்காக அழைத்து சென்றார்.
அப்போது அவரை நெருங்கிய வாலிபர் ஒருவர் அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து நாயை தொட்டு கொஞ்சலாமா? என்று கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நாயை வாங்கும் சாக்கில் அவரை தகாத இடங்களில் தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், மிரண்டு போன அந்த பெண் வாலிபரை தூர தள்ளி விட்டுள்ளார். ஆனால், அந்நபர் மீண்டும் பெண்ணை நெருங்கியுள்ளார். இதனால், வாலிபரின் கன்னத்தில் அந்த பெண் ஓங்கி அறைந்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது, அந்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், பயந்து போன வாலிபர் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.