தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக சட்டசபையில் இருந்தும் கவர்னர் வெளிநடப்பு

கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரு,
தமிழகம் மற்றும் கேரளா சட்டசபைகளின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். இதேபோல், கேரள கவர்னர் ராஜேந்திர அட்லேக்கரும் தனது உரையில் சில பகுதிகளை விட்டு வாசித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே கர்நாடாகவில் ஆளும் காங்கிரசுக்கும், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே கர்நாடக அரசு நிறைவேற்றிய சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவர் திருப்பி அனுப்பி வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பெயர் மாற்றத்துக்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தின் புதிய மசோதாவை ரத்து செய்யவும் கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடரை இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடத்துவதாக சபாநாயர் யு.டி.காதர் அறிவித்தார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. ஏற்கனவே, தனக்கு அளிக்கப்பட்ட அரசு உரையில், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கவர்னர் தவார் சந்த் கெலாட் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சட்டசபைக்கு இன்று கவர்னர் தவார் சந்த் கெலாட், தனது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கவும் முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கவர்னர் உரையை புறக்கணித்து வெளியேறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






