சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. கைது

சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணி என கூறி துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவுநிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது. தங்க கவசத்தை தாமிர கவசம் என கூறி திட்டமிட்டு கொள்ளையடித்த பகீர் சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான பொறுப்பில் இருந்தவர்கள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது சிறப்பு விசாரணை குழுவின் அதிரடி விசாரணையில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கில் இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுனீஷ் குமார், முன்னாள் தலைவரும், ஆணையருமான வாசு, திருவாபரண ஆணையர் பைஜு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் அடுத்த கட்டமாக முன்னாள் தேவஸ்தான தலைவரான பத்மகுமாரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை சிறப்பு விசாரணை குழுவினர் தொடங்கினர். இதில் அவருக்கும், இந்த தங்கம் அபகரிப்பு வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர். அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் பத்மகுமார் பணப்பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது.
கைதான பத்மகுமார் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறுகையில், நான் தலைவராக இருந்த போது, சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. சட்டப்பூர்வமாக விசாரணையை எதிர் கொள்வேன் என்றார். பத்மகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.






