தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளில் திருட்டு.. பெண் உள்பட 4 பேர் செய்த அதிர்ச்சி சம்பவம்

கைதான 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு வழக்குகளில் பெண் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் சவுபாக்யா என்ற லதா(வயது 24). இவரது நண்பர் புருஷோத்தம்(22), தர்ஷன்(20), சந்துரு(24) என்று தெரிந்தது. இவர்களில் புருஷோத்தம், தர்ஷன், சந்துரு ஆகிய 3 பேரும் ‘கில்லாடி’ திருடர்கள் ஆவார்கள்.
ரெயில் தண்டவாளம் ஓரம் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் கதவை உடைத்து 10 நிமிடங்களுக்குள் நகை, பணத்தை திருடி சென்று விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் பெங்களூருவில் இருந்து ரெயிலில் பயணிப்பார்கள்.
அவர்கள் திருட்டில் ஈடுபட இருக்கும் இடத்துக்கு முந்தைய ரெயில் நிலையங்களில் இறங்கி விடுவார்கள். அதாவது 3 பேரும் வெவ்வேறு ரெயில் நிலையங்களில் இறங்கி விடுவார்கள். ரெயில் நிலையங்களில் இறங்கியதும், தங்களுடைய செல்போன்களை சுவிட்ச்-ஆப் செய்து விடுவார்கள். பின்னர் தண்டவாளத்திலேயே நடந்து வந்து 3 பேரும் சந்தித்துக் கொள்வார்கள். பின்னர் அவர்கள் 3 பேரும் ஓரிடத்தில் தங்களது செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு வீடுகளுக்குள் புகுந்து திருடிவிட்டு மீண்டும் வந்து தங்களுடைய செருப்புகளை அணிந்து கொண்டு ரெயில் நிலையங்களுக்கு வருவார்கள்.
அங்கு மீண்டும் செல்போன்களை ஆன் செய்து, ரெயில்களுக்கான செல்போன் செயலி மூலம் அடுத்து அந்த ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில் எது என்று தெரிந்து கொண்டு அதில் ஏறி தப்பி விடுவார்கள். இவ்வாறு அவர்கள் துமகூரு, தார்வார், உப்பள்ளி, பெங்களூரு, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் திருடி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் திருடும் நகைகளை விற்று கொடுப்பது, சிறையில் அடைக்கப்பட்டால் 3 பேரையும் ஜாமீனில் எடுக்கும் வேலைகளை சவுபாக்யா செய்து வந்துள்ளார். கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி டி.பி.நாராயணப்பா லே-அவுட்டில் வசிக்கும் திவ்யாஸ்ரீ என்பவரின் வீட்டுகதவை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணத்தை இவர்கள் திருடி இருந்தார்கள்.
கைதானவர்களை துமகூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சமீபத்தில் தான் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சவுபாக்யா உடற்பயிற்சியாளர் ஆவார்.
திருட்டு நகைகளை பறிமுதல் செய்ய செல்லும் போலீசார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரும் அளித்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சி.கே.பாபா தெரிவித்துள்ளார். கைதான 4 பேர் மீதும் தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.






