இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?

இந்தியாவில் முதல் முறையாக உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
புதுடெல்லி,
பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புத்துறை வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் உலக அளவில் நடத்தப்படுகிறது. சர்வதேச நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் கடந்த 1985-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை கனடாவின் வின்னிபெக் நகரில் நடந்தது. மொத்தம் 20 முறை நடந்த இந்த விளையாட்டு போட்டிகளை அமெரிக்கா 8 முறையும், கனடா 5 முறையும் நடத்தி உள்ளன. மேலும் ஐரோப்பா 4 முறை, இங்கிலாந்து 2 முறை, சீனா ஒருமுறையும் நடத்தி இருக்கின்றன.
இந்த விளையாட்டுப்போட்டிகளில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்தியாவும் பங்கேற்று வருகிறது. அப்போது முதல் இந்த போட்டிகளில் இந்தியா 1,400-க்கு மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்து இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த போட்டிகளிலும் 224 தங்கம், 82 வெள்ளி, 37 வெண்கலம் என 343 பதக்கங்களை குவித்தது.
இவ்வாறு போலீஸ், தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் இந்தியா, மேற்படி உலக போட்டிகளை உள்நாட்டில் நடத்த முடிவு செய்தது. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக இந்தியாவில் உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி 2029-ம் ஆண்டு நடைபெறும் போட்டி மேற்படி இந்தியாவின் ஆமதாபாத் நகரில் நடைபெறுகிறது. உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடப்பது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா மகிழ்ச்சியும், பெருமிதமும் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், '2029-ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடாக பாரதம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம் ஆகும். இது பிரதமர் மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது பரந்த விளையாட்டு உள்கட்டமைப்புக்கான உலகளாவிய அங்கீகாரமாகும்' என பதிவிட்டிருந்தார்.