ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்


ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
x

ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மற்றும் போரில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

அதில், குறிப்பிட்ட அந்த வங்கிக்கணக்கில் ஒவ்வொரு இந்தியர்களும் தங்களுடைய விருப்பப்படி குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம். இவ்வாறு செலுத்தப்படும் தொகையை கொண்டு இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைபிரிவுகளுக்கு ஆயுதங்கள் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு வெளியிட்டுள்ள பதிவில்,

'இந்த தகவல் தவறாக வழிநடத்தப்படுகிறது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கோ, ஆயுதங்கள் வாங்க உதவி பெறுவதற்கோ அந்த வங்கிக்கணக்கு உருவாக்கப்படவில்லை. ராணுவ செயல்பாடுகளின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கோ அல்லது காயம் அடைந்த வீரர்களுக்கோ உடனடியாக நிதி உதவி வழங்குவதற்காக முப்படைகள் போர் உயிரிழப்புகள் நல நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை செலுத்துவதற்கான இணையதளம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story