மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது துரதிர்ஷ்டவசமானது - ராகுல் காந்தி
மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து பயிற்சி மையத்தில் பயின்று வந்த 3 பேர் பலியானது தொடர்பாக ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள வேறு ஏதேனும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களில் தரைதளம் இருந்தாலும் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தது, மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. டெல்லி மழையில் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமை, அதை அமைத்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத்திட்டமிடல், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்டவற்றை பெற சாமானியக் மக்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் உயிரை நீத்து விலை கொடுக்கிறார்கள். டெல்லி தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு நிர்வாக உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த தோல்வியே காரணமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.