சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பாஜக நிர்வாகியின் மகன் - வைரல் வீடியோ

சுங்கச்சாவடிக்கான கட்டணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜி கவுடா பட்டில். இவர் பாபாலேஷ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். விஜி கவுடாவின் மகன் சமர்த் கவுடா பட்டில். இவரும் பாஜக கட்சியில் உள்ளார்.
இந்நிலையில், சமர்த் கவுடா பட்டில் நேற்று கனோலி சுங்கச்சாவடி வழியாக ஆதரவாளர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, சுங்கச்சாவடிக்கான கட்டணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர் கூறியுள்ளார்.
அப்போது, தான் பாஜக நிர்வாகியின் மகன் என்றும் தனது காருக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளார். பின்னர், காரில் இருந்து இறங்கிய சமர்த் கவுடா பட்டில் சுங்கச்சாவடிக்குள் சென்று அங்கு பணியில் இருந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர் புகார் அளிக்காததால் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.






