காதலனைக் கொன்ற குடும்பத்தினர்... இறுதிச் சடங்கின்போது காதலி செய்த காரியம்

காதலன் இறந்தாலும், எங்கள் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று இளம்பெண் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சல் தனது சகோதரர்கள் மூலம் சாக்ஷமை சந்தித்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களது காதல் ஆஞ்சலின் வீட்டுக்கு தெரிய வந்தது.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆஞ்சலின் குடும்பத்தினர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலமுறை ஆஞ்சலை மிரட்டியும், அவர் சாக்ஷம் உடனான காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆஞ்சலின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவரது தந்தையும், சகோதரர்களும் வியாழக்கிழமை அன்று சாக்ஷமை கடுமையாக தாக்கி அவரது தலையில் சுட்டுக் கொலை செய்தனர். மேலும் அவரது தலையில் கல்லை போட்டு நசுக்கியுள்ளனர்.
இந்த நிலையில் சாக்ஷமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஆஞ்சல், நெற்றியில் குங்குமம் பூசி, சாக்ஷமின் உடலை மணந்து கொண்டார். இனி அவரது மனைவியாக அவரது வீட்டிலேயே இருக்கப் போவதாக கூறினார். மேலும் சாக்ஷம் இறந்தாலும், எங்கள் காதல் வென்றது. எங்கள் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறது. என் தந்தையும் சகோதரர்களும்தான் தோற்றனர் என்று கூறினார்.
சாக்ஷமை கொலை செய்த ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.






