மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
இந்த வார தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி உதவியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள் மழையால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்களுக்கு நிவராணம் வழங்க ரூ.3,258 கோடி நிதி உதவி வழங்க மராட்டிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி மகரந்த் ஜாதவ் பாட்டீல் கூறியதாவது:-
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்களில் உள்ள 3.365 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ.3,258 கோடியை அரசாங்கம் அனுமதித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 15 லட்சத்து 16 ஆயிரத்து 681 ஹெக்டேர் விவசாய நிலங்களை சேர்ந்த 21 லட்சத்து 66 ஆயிரத்து 198 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடியே 30 லட்சத்துக்கான உதவித்தொகுப்பை மாநில அரசு அனுமதித்துள்ளது. இந்த நிவாரணம் மூலமாக ஒரு தீர்க்கமான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சரியான நேரத்தில் உதவி பெறுவது உறுதி செய்யப்படும். பேரிடரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும், கால்நடைகள் அல்லது வீடு சேதம் அடைந்தவர்களுக்கும் உதவி வழங்க மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம், உதவி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை நாங்கள் நீக்கியுள்ளோம். பீட் மாவட்டத்திற்கு ரூ.577 கோடியே 78 லட்சமும், தாராசிவ்வுக்கு ரூ.292 கோடியே 49 லட்சமும், லாத்தூருக்கு ரூ.202.38 கோடியும், நாந்தெட்டுக்கு ரூ.28 கோடியே 52 லட்சமும், சத்தாராவுக்கு ரூ.6 கோடியே 29 லட்சமும் மற்றும் கோலாப்பூருக்கு ரூ.3 கோடியே 18 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சேதத்தின் அளவை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.






