பீகாரில் தேஜகூ 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பீகாரில் 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 6ல் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 11-ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தர்பங்கா, மோதிஹாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது,
பீகாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பொத்தானை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோஷி நதி நீரை நீர்ப்பாசனத்திற்காகவும், வெள்ளத்தைத் தடுக்கவும் அரசு சார்பில் ரூ. 26 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் நீங்கள் தவறு செய்தால் பீகாரில் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை மீண்டும் வழக்கமாகிவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும்.பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், மிதிலா, கோஷி, திருஹட்டைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக பாட்னா அல்லது டெல்லிக்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் எய்ம்ஸ்-தர்பங்காவில் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள்.
காட்டாட்சி ராஜ்ஜியத்தை துடைத்தெறிய தேஜகூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்யத்தை மீண்டும் மாறுவேடத்தில் கொண்டுவர முயற்சி நடக்கிறது. பீகாரில் தேஜகூ 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






