பஹல்காம் தாக்குதல் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய என்.ஐ.ஏ. தலைவர்

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை, பஹல்காம் தாக்குதல் வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதல் நடைபெற்ற பஹல்காமில் உள்ள பைசாரன் பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு என்.ஐ.ஏ. தலைவர் சதானந்த் டேட் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுடனும் சதானந்த் ஆலோசனை நடத்தினார்.
பஹல்காம் தாக்குதல் பகுதியில் என்.ஐ.ஏ. தலைவர் நேரில் சென்று ஆய்வு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






