யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து இன்று மாநாடு: தமிழ்நாடு உள்பட 7 மாநில மந்திரிகள் பங்கேற்பு


யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து இன்று மாநாடு: தமிழ்நாடு உள்பட 7 மாநில மந்திரிகள் பங்கேற்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 Feb 2025 8:01 AM IST (Updated: 5 Feb 2025 11:01 AM IST)
t-max-icont-min-icon

துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி மந்திரிகள் மாநாடு பெங்களூருவில் இன்று நடக்கிறது.

பெங்களூரு,

துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகள் குறித்து விவாதிக்க ஏழு மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி மந்திரிகள் இன்று பெங்களூருவில் தேசிய அளவிலான கூட்டத்தை நடத்த உள்ளனர்.

முன்னதாக மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டது. அதில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் அந்த விதிமுறைகள் உள்ளன. இதற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

இந்த மாநாட்டை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார். இதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர்கல்வித்துறை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், "துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் கல்வித்துறை பாதுகாப்பாக உள்ளது. எந்த மாநில அரசுடனும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு விதிமுறைகளை திருத்தி வெளியிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் உயர்கல்வி மந்திரிகள் மாநாட்டில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story