இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் - 11 பேர் கைது

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவ படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, குஜராத் ஜாகவ் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஜராத் பாதுகாப்பு பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்த பாகிஸ்தான் மீனவ படகு பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடலோர காவல்படையின் தொடர்ச்சியான கடல்சார் நடவடிக்கைகளையும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களுக்குள் (MZI) சர்வதேச சட்டங்களை உறுதியாக அமல்படுத்துவதன் மூலம் தனது எல்லைகளை பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் கடல்சார் பகுதி முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்வது நமது தேசிய கடல்சார் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக திகழ்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.






