சொத்தை அபகரிக்க திட்டம்: 11 மாதங்களாக திட்டமிட்டு மனைவியை கொன்ற டாக்டர்.. வெளியான பகீர் தகவல்கள்

11 மாதங்களாக திட்டமிட்டு மனைவியை டாக்டர் கொன்றது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
மாரத்தஹள்ளி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் மகேந்திர ரெட்டி (வயது 31). இவரது மனைவி கிருத்திகா ரெட்டி (29). இருவரும் டாக்டர்கள் ஆவர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கிருத்திகா ரெட்டி உயிரிழந்தார். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தடய அறிவியல் அறிக்கையில் கிருத்திகா ரெட்டியை, அவரது கணவர் மகேந்திர ரெட்டியே மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகேந்திர ெரட்டியை மாரத்தஹள்ளி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரை போலீசார் 9 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அவரிடம் நடத்திய விசாரணையில் புதுப்புது தகவல்கள் வௌியாகி வருகிறது.
இ்ந்த நிலையில், மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை கொலை செய்ய 11 மாதங்களாக திட்டமிட்டு, அதனை செயல்படுத்த முயன்றதும், இதில் பல முறை கிருத்திகா ரெட்டியை கொலை செய்ய முயன்றும் முடியாமல் போனதும் தெரியவந்தது. அத்துடன் மாதவிடாய் காலத்தில் கிருத்திகா ரெட்டிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்தை அவர் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும் தனக்கு யாரோ சூனியம் வைத்து இருப்பதாகவும், அது உன்னை பாதித்துவிட்டது. எனவே தார்வார் சென்று சூனியத்திற்கு பூஜை நடத்த வேண்டும் என்றும் மகேந்திரரெட்டி, மனைவியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் அங்கு செல்ல மறுத்து வந்துள்ளார். மனைவியை கொன்று அவரது தந்தையிடம் இருந்து சொத்தை அபகரிக்கவும், துணை பயிற்சி பெண் டாக்டருடனான தொடர்பாலும் மகேந்திர ரெட்டி கிருத்திகாவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக திருமணமான சில நாட்களிலேயே கிருத்திகா ரெட்டிக்கு அவர் மயக்க மருந்தை உடலில் செலுத்தி வந்ததும், இதன் விளைவாக அவர் உயிரிழந்ததும், அவர் புரோபோபோல் என்ற மயக்க மருந்து கிருத்திகா ரெட்டிக்கு செலுத்தியதும் தடயவியல் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
கிருத்திகா ரெட்டியின் மரணத்திற்கு பிறகு மகேந்திர ரெட்டி விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேலையை விட்டு நின்றுள்ளார். பின்னர் உடுப்பி மாவட்டம் சுள்ளியாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கிருத்திகா ரெட்டி உயிரிழந்த பிறகு, அவரது தந்தையிடம் உள்ள சொத்தை கைப்பற்ற மகேந்திர ரெட்டி முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருத்திகா ரெட்டி கொலை வழக்கில் தினமும் பகீர் தகவல்கள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மகேந்திர ரெட்டியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






