பஞ்சாப்: பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது.
சண்டிகர்,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மே 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மவட்டம் ஹை பெல்மி கெ என்ற கிராமத்தில் லக்விந்தர் சிங் (வயது 57) என்பவரின் வீட்டின் மீது பாகிஸ்தான் ஏவிய ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் விழுந்தன. இதனால், வீடு தீப்பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் லக்விந்தர் சிங், அவரது மனைவி சுக்விந்தர் கவுர் (வயது 50), மகன் ஜெஸ்விந்தர் சிங் (வயது 24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே 13ம் தேதி சுக்விந்தர் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் லக்விந்தர் சிங் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிறுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்விந்தர் சிங் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லக்விந்தர் சிங்கின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். ஆனால், லக்விந்தர் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






