பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்

பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார் என்று டிரம்ப் பாராட்டினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இதைபோல பிறந்தநாள் வாழ்த்து கூறிய டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “எனது பிறந்தநாளில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி. உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். ரஷியா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா-அமெரிக்கா இடையே எதிர்மறை கருத்துகள் எழுந்தன நிலையில்,. 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.






