போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும்: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

கோப்புப்படம்
போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ரஷிய அதிபர் புதினை வருகிற 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசுகிறார். டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் புதினை சந்திப்பது இது முதல் முறையாகும்.
இதனிடையே கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வழியாகப் பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதின் - மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதிலும், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைக் கேட்டதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் வழங்குவதற்கும், உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






