ஆமதாபாத் விமான விபத்து; விமானி கடைசியாக அதிர்ச்சி கலந்த குரலில் பேசிய வார்த்தைகள் என்ன?

பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும்.
ஆமதாபாத்,
கடந்த 12-ந் தேதி, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, விமானிகள் அறையில் இருந்து பேசப்பட்ட கடைசி வார்த்தைகள் வெளிவந்துள்ளன. ''உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது, மேடே மேடே மேடே'' என்று விமானி அதிர்ச்சி கலந்த குரலில் கூறியுள்ளார்.அவரது வார்த்தைகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை எட்டியுள்ளன. ஆனால் அடுத்த சில வினாடிகளில் அனைத்து தகவல்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது:-
பொதுவாக, பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும். ஆனால், விபத்துக்குள்ளான விமானம், மொத்தம் உள்ள 3.5 கி.மீ. தூர ஓடுபாதையையும் ஓடிவிட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் அது தெரிகிறது.எனவே, விமானத்துக்கு போதிய உந்துசக்தி கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும், கருப்பு பெட்டி தரவுகளை ஆய்வு செய்த பிறகே அது உறுதி செய்யப்படும்.
முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஓடுபாதை மாற்றத்துக்கோ, உந்துசக்தி தொடர்பாகவோ வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. வானிலை சீராக இருந்தது. தெளிவாக பார்க்க முடிந்தது. வெப்பநிலை அதிகமாக இருந்தது. ஆனால், வரம்புக்குள் காணப்பட்டது. ராடார் குறைபாடு எதுவும் காணப்படவில்லை. என்ஜின் கோளாறு கண்டறியப்படவில்லை. அனைத்து தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
உந்துசக்தி கிடைக்காததற்கான காரணங்களை விமான தரவுகள், விமானிகள் அறை குரல் பதிவுகள் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.