உதவிகேட்டும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகள்; நடுரோட்டில் மனைவி கண்முன்னே மாரடைப்பால் உயிரிழந்த நபர்

மாரடைப்பு ஏற்பட்டதுடன் பைக்குடன் இழுத்து செல்லப்பட்டதால் வெங்கடரமணன் உயிருக்கு போராடினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி ரூபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டில் இருந்த போது வெங்கடரமணனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது மனைவி ரூபாவை அழைத்துக்கொண்டு பைக்கில் கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு டாக்டர்கள் இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தம்பதி பைக்கில் சென்றனர். அங்கு வெங்கட ரமணனுக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்குள்ள டாக்டர்கள் அங்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் உடனடியாக ஜெயதேவா மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் அவர்கள் ஆம்புலன்சில் ஜெயதேவா மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் பைக்கில் ஜெயதேவா மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். ஆனால் வழியிலேயே கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்ற போது 2-வது முறையாக வெங்கடரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளுடன் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
அவரது மனைவி ரூபா சாலை தடுப்பில் பைக் மோதியதும் கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவர் பதறியடித்தபடி வெங்கடரமணன் அருகே சென்று அவரை மீட்டுள்ளார். மேலும் மாரடைப்பு ஏற்பட்டதுடன் பைக்குடன் இழுத்து செல்லப்பட்டதால் வெங்கடரமணன் உயிருக்கு போராடினார்.
இதனால் தனது கணவர் உயிரை காப்பாற்ற ரூபா அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை கைகாட்டி நிறுத்தி உதவி கோரியுள்ளார். ஆனால் நீண்டநேரமாக யாரும் அந்த தம்பதிக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து ரூபா தனது மைத்துனிக்கு (வெங்கடரமணனின் தங்கை) செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். அதன்படி அவர் விரைந்து வந்து, தனது அண்ணனின் உயிரை காப்பாற்ற மூச்சு காற்றை கொடுத்து நெஞ்சை கைகளால் அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இருப்பினும் ரூபா உதவி கேட்டு வாகன ஓட்டிகளை நிறுத்துமாறு கூறியபடி இருந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு கார் டிரைவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர், வெங்கடரமணன், அவரது மனைவி ரூபா, வெங்கடரமணனின் தங்கை ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு இருதய மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு வெங்கடரமணனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ரூபா, வெங்கடரமணனின் தங்கை ஆகியோர் கதறி அழுதனர்.
இதற்கிடையே நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கணவரை காப்பாற்ற ரூபா வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டும், யாரும் உதவி செய்ய முன்வராமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியவர் உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்துவிட்டார்.






