“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி


“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2025 12:32 PM IST (Updated: 7 Oct 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வழக்கறிஞர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர்.

அவரை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், “சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்’’ என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ‘‘இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது” என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பெயர் ராகேஷ் கிஷோர் (வயது 71) என்றும், டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருடன் இணைந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கறிஞரின் செயலுக்கான நோக்கம் குறித்த தகவல்கள் இனிமேல்தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தலைமை நீதிபதி கோர்ட்டில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. கண்டனத்துக்கு உரியது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான செய்தியின் விளைவு. இருப்பினும், தலைமை நீதிபதி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். இந்த பெருந்தன்மையை மற்றவர்கள் பலவீனமாக கருத மாட்டார்கள் என்று நம்புகிறேன். தலைமை நீதிபதி முழு பக்தியுடன் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவரும் இதை தெளிவுபடுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட வக்கீலை இப்படி செய்ய தூண்டியது எது என்று எனக்கு புரியவில்லை. மலிவான விளம்பரம் தேடி, கவனத்தை ஈர்க்க செய்ததாக தோன்றுகிறது” என்று கூறினார்.

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு ஒரு வழக்கு சுட்டிக்காட்டப்படுகிறது. கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் 7 அடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவக்கோரி தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த மாதம் தள்ளுபடி செய்தார். அப்போது அவர், “இந்த மனு, விளம்பர நல மனு. போய் அந்த தெய்வத்திடமே ஏதாவது செய்யுமாறு கேளுங்கள். நீங்கள் விஷ்ணு பக்தர் என்றால், பிரார்த்தனை செய்யுங்கள். தியானம் செய்யுங்கள்” என்று கூறினார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அவற்றுக்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, “நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன்” என்று விளக்கம் அளித்தார். இந்த பின்னணியில் தான், தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக பார் கவுன்சில் அறிவித்தது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஏ.என்.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த செப்., 16ம் தேதி தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். சுப்ரீம்கோர்ட்டின்ன் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் அதை கேலி செய்யாதீர்கள்.

அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி. இருப்பினும், நான் வன்முறையை எதிர்க்கிறேன், ஆனால் எந்தக் குழுவையும் சாராத ஒரு சாதாரண மனிதனான நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். அது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காக பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எதையும் செய்யவில்லை. கடவுள் என்னை அதை செய்ய வைத்தார்.

தலைமை நீதிபதி ஓர் அரசியலமைப்பு பதவியில் அமர்ந்திருக்கிறார், மேலும் அவர் “மை லார்ட்” என்று அழைக்கப்படுகிறார், எனவே அவர் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கண்ணியத்தை பராமரிக்க வேண்டும். பரேலியில் அரசாங்கத்தின் நிலத்தை ஆக்கிரமித்த மக்களுக்கு எதிராக யோகி ஆதியநாத்தின் புல்டோசர் நடவடிக்கை தவறா என்று தலைமை நீதிபதியையும், என்னை எதிர்க்கும் மக்களையும் நான் கேட்கிறேன்?. விஷயம் என்னவென்றால், ஆயிரம் ஆண்டுகளாக நாம் சிறிய சமூகங்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறோம்.

நாங்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கிறோம், ஆனால் எங்கள் அடையாளமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது எந்த சனாதனியும் தங்கள் வீடுகளில் அமைதியாக இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். நான் யாரையும் தூண்டவில்லை, ஆனால் மக்கள் தங்கள் சொந்த நலன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 35-ன் கீழ், நான் பார் கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு ஒரு ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட வேண்டும், அது ஒரு நோட்டீஸ் அனுப்பும், நான் பதிலளிப்பேன்.

ஆனால் பார் கவுன்சில் என் வழக்கில் விதிகளை மீறிவிட்டது. செப்டம்பர் 16ம் தேதிக்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை என்பதால், நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னை எழுப்பி, ‘நாடு எரிகிறது, நீங்கள் தூங்குகிறீர்களா?’ என்று கேட்டது. தலைமை நீதிபதி என்னை விடுவித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போலீஸ் என்னை 3-4 மணி நேரம் விசாரித்தது. நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் என்னை சிறைக்கு அனுப்பவோ அல்லது தூக்கிலிடவோ விரும்பினால், அது அவரது விருப்பம்

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story