நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை


நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை
x

புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

புதுச்சேரி

புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

நில மோசடி

புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 64 ஆயிரம் சதுரஅடி நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு மனைகளாக பிரித்து விற்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த மோசடி வழக்கில் குற்றவாளிகளாக நில அளவை மற்றும் பத்திரப் பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி (அப்போதைய தாசில்தார்) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை

இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் பெருமளவு பணம் கைமாறி உள்ளது. எனவே, இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சென்னை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது.

அறங்காவல்குழு

மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு புதுவை அரசுத்துறைகள் உதவிட வேண்டும் என்று கூறி அரசுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது. இததொடர்பாக அமலாக்கத்துறை கேட்கும் விவரங்களை அளிக்க துணை கலெக்டர்கள், சார்பதிவாளர்கள், இந்து அறநிலையத்துறை, புதுவை நகரமைப்பு குழுமம், பொதுப்பணித்துறை, சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வருகிற 19-ந்தேதி ஆஜராகுமாறு கோவில் அறங்காவலர் குழுவை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story