'ராக் பீச்' புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிப்பு


ராக் பீச் புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிப்பு
x

புதுச்சேரி காந்தி திடலில் உள்ள ‘ராக் பீச்’ புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் புதுச்சேரி காவல்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலின் எதிரே உள்ள 'ராக் பீச்' புகையிலை இல்லாத கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை கடற்கரை சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்ப்பலகை வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அறிவிப்பு பலகைகளை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், 'ஆண்டுதோறும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர், புகையிலை பழகத்திற்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. உலகில் புகையிலை பயன்பாட்டினால் 12-ல் ஒருவர் பலியாகின்றனர். இந்தியாவில் புற்றுநோயால் இறப்பவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்கள் தான். இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புகையிலை பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் புதுச்சேரி 'ராக் பீச்' புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை சாலை முழுவதும் புகை பிடிக்கக்கூடாது. கடற்கரைக்கு புகையிலை பொருட்கள் கொண்டு வரக்கூடாது'. என்றார்.


Next Story