மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம்


மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம்
x

மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம் மற்றும் 500 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம் மற்றும் 500 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

தடைக்கால நிவாரணம்

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 2-வது கட்டமாக ரூ.6 ஆயிரத்து 500 வழங்கும் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அலுவலகத்தில் நடந்தது. அப்போது மீனவர்களின் வங்கிக்கணக்கில் தொகையை செலுத்துவதற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

அதன்படி, புதுவை பகுதியை சேர்ந்த 505 குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 438 குடும்பங்களுக்கும், மாகி பகுதியை சேர்ந்த 9 குடும்பங்கள், ஏனாம் பகுதியை சேர்ந்த 58 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.65 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது.

இயற்கை சீற்றம்

மேலும் கடந்த 2020 முதல் 2017 வரை இயற்கை சீற்ற காலங்களில் சேதமடைந்த படகு, வலை, உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு இதுவரை தரப்படாமல் இருந்த நிவாரணத்தொகை மீனவர் நலம் மற்றும் துயர்துடைப்பு சங்கம் மூலம் 504 மீனவர்களுக்கு ரூ.49 லட்சத்து 62 ஆயிரத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவதையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார். ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 15 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

500 விசைத்தெளிப்பான்

அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தோட்டக்கலை எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பேட்டரியினால் இயங்கும் விசைத்தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.

இதற்காக விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்து பேட்டரியினால் இயங்கும் விசைதெளிப்பான்கள் வாங்கப்பட்டு 500 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் 500 பேருக்கு விசைத்தெளிப்பான்களை வழங்கினார். மேலும் டிராக்டர், டிரைலர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் ஆகியன வாங்கிட 4 பயனாளிகளுக்கு ஆணைகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story