மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்


மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
x

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்கிறார்கள்.

காரைக்கால்

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்கிறார்கள்.

மீன்பிடி துறைமுகம்

காரைக்கால் மாவட்ட மீனவர்களின் வசதிக்காக கடந்த 2009-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. அப்போது இருந்த படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த துறைமுகம் அமைக்கப்பட்டது. தற்போது படகுகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அதாவது, 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதற்காக பயன்படுத்தப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை நிறுத்த துறைமுகத்தில் போதுமான இடவசதி இல்லை. இதனால் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்படும் போது ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து வருகிறது.

ரூ.70 கோடி ஒதுக்கீடு

எனவே மீன்பிடித் துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும், முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள், கடந்த 14 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து மீனவர்கள், நேற்று புதுச்சேரிக்கு சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார். மேலும் மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

போராட்டம் வாபஸ்

இதைத்தொடர்ந்து காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததின் பேரில் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

இதனால் 14 நாட்களாக நீடித்த மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story