போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Jun 2024 8:27 AM GMT (Updated: 11 Jun 2024 9:39 AM GMT)

போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன் திட்டம்' விரைவில் தொடங்கப்படும். திட்டங்களை கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் என்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

'மக்களுடன் முதலமைச்சர்' திட்டத்தை ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" மற்றும் "நீங்கள் நலமா?" போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது. பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் பிரச்சினைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.


Next Story