தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பாடு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முப்புடாதி (வயது 26) என்பதும், அவர் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்சொன்ன போலீசார் முப்புடாதியை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






