தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு

எட்டயபுரத்தில் வீட்டிற்குள் பீரோவை உடைத்து 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சண்முகவேல்நகர் அலங்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சக்திவேல் (வயது 56). இவரது சொந்த ஊரான விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தத்தில் விவசாய நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு எட்டயபுரத்தில் இருந்து கோட்டநத்தத்திற்கு சென்றார்.
அங்குள்ள நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், எட்டயபுரத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த பீரோவையும் உடைத்து, அதிலிருந்த 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி ெசன்றனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் அன்றைய தினம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று இரவில் கோவில்பட்டி-தூத்துக்குடி மெயின் ரோட்டில் சக்திவேலு வீட்டில் கொள்ளையடித்த கும்பல், அவரது காரில் தப்பி சென்றது பதிவாகி இருந்தது.
இந்த பின்னணியில் கொள்ளை கும்பலை பிடிக்க எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சக்திவேல் வீட்டில் நகைகள், பணத்தை கொள்ளையடித்தது, மதுரை சிந்தாமணி கல்லுடையான் கோவில் தெருவை சேர்ந்த கனகசுந்தரம் மகன் காமாட்சி(33), மதுரை வயிரவநல்லூர் ராதாகிருஷ்ணன் மகன் சங்கர்(28) உள்பட 3 பேர் என அடையாளம் தெரிந்தது.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரையில் பதுங்கி இருந்த காமாட்சி, சங்கர் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் கடத்தப்பட்ட காரையும் போலீசார் மீட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






