மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது

18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது
Published on

சென்னை,

கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான தமிழக இளைஞர்கள் குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா விசா மூலம் ஏமாற்றி அவர்களை அழைத்து சென்ற மோசடி கும்பல் மியான்மர் நாட்டில் உள்ள கே.கே.பார்க் என்ற பகுதியில் தவிக்கவிட்டனர்.

மிகக்குறைந்த சம்பளத்தில் அந்த அப்பாவி இளைஞர்கள் மியான்மர் நாட்டின் கலவரப் படையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு சைபர் கிரைம்' குற்றப்பிரிவு போலீசார் புளூ டிரை ஆங்கிள்' என்ற தலைப்பில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி, வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ராஜ்குமார் (வயது 36), மணவாளன் (35), தீபக் (27), அபிஷேக்ராஜன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்கள் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்ட வேலைவாய்ப்பு மோசடி குழுவில் ஏஜென்டுகளாக இருந்தவர்கள் ஆவார்கள. சட்டவிரோதமாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட 465 இந்தியர்கள் கடந்த 6 மற்றும் 10-ந்தேதிகளில் மீட்கப்பட்டு இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 35 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள்.

இதில் 18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுபோல் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக யாராவது விளம்பரப்படுத்தினால் அதன் உண்மை தன்மையை குறித்து விசாரித்து, அவர்கள் சட்டபூர்வமான ஏஜெண்டுகளா? என்பதை தெரிந்து வேலைக்கு அணுகவேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com