பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்: குழந்தைகளுடன் 2 பேரும் பரிதவிப்பு

பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்: குழந்தைகளுடன் 2 பேரும் பரிதவிப்பு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 22). டிப்ளமோ முடித்துள்ள இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், ஊட்டியில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

அவ்வப்போது காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கினர். அவர்களுக்கு இடையே செல்ல சண்டைகள் ஏற்பட்டு வந்தது. அப்போது 2 பேரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் காதலிப்பதாக கூறி ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே பள்ளி மாணவியுடன் சமாதானமாகி, அவருடன் மீண்டும் பிரவீன் பழகி வந்தார்.

அப்போது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அவருடன் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இதையடுத்து கல்லூரி மாணவியுடன் பிரவீன் நெருங்கி பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

மேலும் கல்லூரி மாணவி 18 வயது நிறைவடைந்தவராக இருந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை. மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பள்ளி மாணவிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டது. அவரை தாய் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனால் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அதிலிருந்து மீள்வதற்குள், சிறிது நேரத்தில் பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com