ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை; பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை; கொசு மருந்து முழுமையாக அடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் அவதியுற்று வருகின்றனர். மக்களின் வாழ்வாதார வசதிகளை செய்து தராத நிலையில் வீட்டு வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள கடைகளுக்கு குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில், ஆவடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.அப்துல் ரஹீம், கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி. அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி, நகரக் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக ஸ்டாலின் மாடல் அரசையும்; ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com