தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது


தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது
x

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது.

தூத்துக்குடி

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்குவேன் என்ற முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

இந்த மறியல் போராட்த்துக்கு சங்க மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின்போது, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான; அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மே மாத விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். மினி மையங்களில் இருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமெண்ட் அல்லது பணியில் சேர்ந்த தேதியை கணக்கில் எடுக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கி, பதவி உயர்வில் நேரடி நியமனத்தை கைவிட்டு, 100 சதவீத பதவி உயர்வை அங்கன்வாடி ஊழியர்களுக்கே வழங்க வேண்டும். அரசு புதிய நியமனங்களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி என்பதை கட்டாயமாக்காமல், 10 ஆண்டு பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உதவியாளர்களுக்கும், 5 ஆண்டு பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, BLO பணியில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை விடுவிக்க வேண்டும். அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்று தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மறியல் போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் ரசல் துவக்கி வைத்தார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பொருளாளர் அப்பாதுரை உள்ளிட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெபராணி உள்பட பல நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி மாநகர போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

1 More update

Next Story