காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தூத்துக்குடியில் பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்; பார்களும் திறக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் கடந்த 2-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மது பாட்டில்களை விற்பனை செய்யும் போது டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வர். மதுவை பயன்படுத்துவோர் பயன்படுத்திய பிறகு காலி பாட்டிலை ஸ்டிக்கருடன் டாஸ்மாக் பார் நடத்துபவரிடம் கொடுத்து பத்து ரூபாய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதிமுறை.
இந்த திட்டம் அமுல்படுத்திய நாளிலிருந்து மதுவை பயன்படுத்துவோருக்கும், டாஸ்மாக் பார் நடத்துபவர்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை, மண்டை உடைப்பு என்று தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டவுடன் டாஸ்மாக் கடைகளை பூட்டி மது விற்பனையை நிறுத்தம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டது.
மேலும் பாட்டிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை மட்டும் கொடுத்துவிட்டு பத்து ரூபாய் கேட்பதாகவும் பாட்டிலுடன் ஸ்டிக்கரையும் சேர்த்து ஒப்படைத்தால் மட்டுமே பத்து ரூபாய் கொடுக்க முடியும் என்பதில் பார் ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை; பார்களும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.






