சென்னையில் நாளை பாஜக உயர்மட்டக்குழுக் கூட்டம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த சந்திப்புகள் தமிழக அரசியல் தொடர்பான முக்கிய விவாதங்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில்,பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (டிசம்பர் 17) சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடைபெறும் இந்த உயர்மட்டக் குழு கூட்டம், மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள், தொகுதி வாரியான நிலவரம், பலவீனமான பகுதிகளில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது, சமூக வாக்கு வங்கி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






