திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பாஜக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
சென்னை,
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து கடந்த டிசம்பர் 1 ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் விமர்சனம் செய்தும் திமுக கூட்டணி கட்சிகள், அமைச்சர்கள் உட்பட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்களுக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை பரப்பி சமூகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மத மோதலுக்கு ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களையும் அவதூறு விமர்சனங்களையும் செய்து வந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், காவல்துறையும் அறநிலையத்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல் முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணை நடந்து முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதில் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சட்டத்துறை அமைச்சராக இருந்தவரும்,இந்நாள் கனிமவள அமைச்சருமான ரகுபதி மதுரை ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை விமர்சித்தும் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவதூறு கருத்துக்களையும் நீதிமன்றத்தின் மாண்பையும் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சிதைக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனையடுத்து, பாஜக வழக்கறிஞர்கள் ஜி.எஸ். மணி மற்றும் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் அமைச்சர் ரகுபதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நீங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும் அமைச்சர் பதவியின் மாண்புக்கு எதிராகவும் நீதிமன்றத்தின் மாண்பையும் நீதிபதிகளின் கண்ணியத்தையும் நடவடிக்கையும் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் மக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதுள்ள மாண்பை மரியாதையை குறைக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதால் ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது. உடனே உங்கள் கருத்துக்களை திரும்ப பெற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கூறவேண்டும். இல்லையேல் உங்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






