தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, தெற்கு காமராஜ் நகரில் வசிப்பவர் ராமநாதன் மகன் முனியசாமி (வயது 19), உத்தரபிரதேச மாநிலம் பகப்பூரைச் சேர்ந்த பியூரி அலி மகன் சிரமான் அலி(24) ஆகிய இருவரும் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து பைக்கில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாலையில் சிரமான் அலி பரிதாபமாக இறந்தார்.
முனியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த நாசரேத் சின்னமாடன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் பொன்மாரிமுத்து(33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






