சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு

ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவின் பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் கவர்னர் கெஸ்ட் ஹவுஸ் அருகே கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அங்கிருந்த மீனவர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் பிரகாஷ், முகமது ஆதில் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில், பிரகாஷ் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தன நிலையில் முகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, மாயமான எஞ்சிய ஒரு மாணவனான ரோஹித்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் ரோகித் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. இதையடுத்து, ரோகித்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






