பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனே மூட முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்; ராமதாஸ்


பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனே மூட முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்; ராமதாஸ்
x

சமூக சீர்கேடுகள் அதிகரிப்பதுடன் குடும்ப நிம்மதியும் குலைகிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

சென்னை

மதுக்கடைகளை மூடுவதில் பொறுப்பை தட்டிக் கழிக்காமல் பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனே மூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 2-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள அரசு மதுபான (டாஸ்மாக்) கடைக்கு மது குடிக்க வந்த 22 வயது இளைஞர் ஒருவர் போதை தலைக்கேறி மதுக்கடைக்கு அருகேயுள்ள ஒரு பெண்மணியின் வீட்டுக்குள் புகுந்துள்ளார். தகவலறிந்து வந்து விசாரித்த செஞ்சி காவல் நிலைய ஏட்டு முனியப்பனையும் அந்த குடிகார இளைஞர் தாக்கியுள்ளார். 'ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த' கதையாக குடிபோதையால் குடும்பத்தில் பிரச்சனை, நண்பர்களிடம் பிரச்சனை, பொது இடங்களில் பிரச்சனை என்ற நிலை மாறி பிரச்சனையை தடுக்கச் சென்ற காவலரையே தாக்கும் அளவுக்கு மது போதையால் மனிதர்கள் மிருகங்களாகி வருகின்றனர். 'மதுவால்தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது"என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் சென்னை அம்பத்தூரில் ' மது குடிக்க பணம் கேட்டு தாக்கிய மகனை கொலை செய்த பெற்றோர்', கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ''மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்துக் கொன்ற மகன்', விருத்தாசலத்தில் 'மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொன்ற தாய் சிறைக்கு சென்றதால் அனாதைகளான 3 குழந்தைகள்', 'மது குடித்துவிட்டு தகராறு செய்த விரக்தியில் தற்கொலை செய்த தாய்' இப்படி மதுவால் ஒவ்வொரு நாளும் பல குடும்பங்கள் பாதிப்படைந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் இவற்றை தவிர்த்து, தடுக்க வேண்டிய அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசே மதுக்கடை நடத்துவதாலும், மதுவால் ஏற்படும் பிரச்சனைகளை சகித்துக் கொண்டு இருப்பதாலுமான தைரியத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் மது குடிக்கின்ற வீடியோவும், கடந்த புத்தாண்டு அன்று சிவகங்கை மாவட்டம், செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளேயே மருத்துவர்கள் மது குடித்து புத்தாண்டை கொண்டாடும் கேவலமான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுபோல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மட்டுமல்லாது சமூக சீர்கேடுகள் அதிகரிப்பதுடன், குடும்ப நிம்மதியும் குலைகிறது. மேலும், பொதுமக்கள் புழங்கும் இடங்களிலும், ஊருக்கு அருகாமையிலும் உள்ள மதுக்கடைகளால் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் தங்களின் அன்றாட பணிகள் மற்றும் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமாக வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதிலும் அவை முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் 3 மதுக்கடைகள் உள்ளன. பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு அருகிலும், வெளியே வரும் இடத்திற்கு முன்பாகவுமாக 2 மதுக்கடைகள் உள்ளன.அதேபோல் தெற்கு மேற்கு மாவட்டங்களை இணைக்கின்ற முக்கிய ரயில்வே சந்திப்பாக திகழ்கின்ற ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் ஒரு மதுபானக்கடை உள்ளது. மேலும், விருத்தாச்சலத்தின் கடலூர் சாலையிலேயே 700 மீட்டர் சாலைக்குள் மட்டும் 5 மதுக்கடைகள் உள்ளன. இதனால் ரயில் பயணிகளில் சிலரும், பேருந்து பயணிகளில் சிலரும் மது அருந்திவிட்டு பயணிக்கும் போது அவர்கள் அரங்கேற்றுகிற அட்டூழியங்களால் ஆண், பெண் பயணிகள் அன்றாடம் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பெண் பயணிகளிடம் தகாத செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். இதுபோல் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ரயில்வே, அம்மாநில அரசுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 'ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளால் குடிபோதையில் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் குடிகாரர்கள் இடையூறு செய்வது அதிகரிப்பதால் ரயில் நிலையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூடவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் உள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக அமைப்புகள் போலவோ அல்லது பிற கட்சிகள் போலவோ " குடிகாரர்களாய் பார்த்து திருந்தட்டும்" என்று கூறி பொறுப்பை தட்டிக் கழிக்காமல் பொறுப்பான முதலமைச்சர் என்கிற வகையில் படிப்படியாக மதுக்கடைகளை மூடும் திட்டத்திற்கு முதல் கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக்கடைகளை உடனே அகற்ற ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story