காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த காரில் 3 கிராம் அளவிலான ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கொகைன் என்ற போதை பவுடர் சிக்கியது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் கொகைன் போதை பவுடர் கடத்திய காங்கோ நாட்டை சேர்ந்த டிசிம்பம்போ (வயது 25), சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஆரிப் அகமது(25), ஏழுகிணறு பகுதியைச்சேர்ந்த ஜோயல்(23), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீல் ரகுமான்(35) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.






