மு.க.ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் ஆலோசனை: 5 பேர் குழுவினர் சந்திப்பு

தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான காட்சியான காங்கிரஸ், கடந்த சட்டசபை தேர்தலில் (2021) 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 18 இடங்களில் வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
அந்தக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், இன்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 40 தொகுதிகளின் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்த குழுவினர் அளித்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசலாம். இன்னும் பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லவா? என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.






