நெல்லையில் 7-ந் தேதி காங்கிரஸ் மாநில மாநாடு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தேர்தல் கமிஷனை கண்டித்து மாநாடு நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடத்தியிருப்பதை தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார். நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் வழங்க மறுக்கிறது. அப்படி வழங்கினால் 30 வினாடிகளுக்குள் தேர்தல் கமிஷன் செய்த மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்பதால் அதை தர மறுக்கின்றன. அதனால்தான் தேர்தல் கமிஷன் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது.
இந்தநிலையில் தேர்தல் கமிஷனின் வாக்கு திருட்டு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட காங்கிரசும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி மாலை 4 மணியளவில் நெல்லையில் எனது தலைமையில் தேர்தல் கமிஷனின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






