சென்னையில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் பணி தீவிரம்

இந்த திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்களை, 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி - 2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவிப்பு 27.10.2025 அன்று வெளியிடப்பட்டு, அதன் செயலாக்கத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி – 2026 தொடர்பான பயிற்சிகள்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும், இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 28.10.2025 முதல் 03.11.2025 வரை கணக்கீட்டுப் படிவங்களை அச்சிடும் பணியும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பான வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவம் வழங்குதல், மீளப் பெறுதல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கூட்டம்
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக 29.10.2025 மற்றும் 03.11.2025 ஆகிய இரண்டு நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 04.11.2025 அன்று முற்பகலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு இதுதொடர்பாக பயிற்சியும் அளிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) 04.11.2025 அன்று முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் விவரம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் 2,35,272 வாக்காளர்களுக்கு 238 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,97,526 வாக்காளர்களுக்கு 284 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,90,653 வாக்காளர்களுக்கு 238 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2,40,466 வாக்காளர்களுக்கு 240 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், திரு. வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் 2,23,571 வாக்காளர்களுக்கு 206 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 1,97,465 வாக்காளர்களுக்கு 169 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,98,576 வாக்காளர்களுக்கு 181 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,80,341 வாக்காளர்களுக்கு 174 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,
சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதியில் 2,40,087 வாக்காளர்களுக்கு 220 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 2,38,374 வாக்காளர்களுக்கு 239 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 2,80,422 வாக்காளர்களுக்கு 253 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2,85,947 வாக்காளர்களுக்கு 270 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2,73,717 வாக்காளர்களுக்கு 254 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் 2,35,497 வாக்காளர்களுக்கு 229 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,69,260 வாக்காளர்களுக்கு 262 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,17,520 வாக்காளர்களுக்கு 261 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் 04.11.2025 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1859 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவார்கள்.
வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவத்தினை வழங்கி உதவிடும் நடவடிக்கைகள்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, 27.10.2025 அன்றைய தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்குவார்கள்.
இப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மற்றும் வாக்காளரின் உறவினர் விவரங்களை வாக்காளர்கள் சிரமமின்றி நிரப்புவதற்கு உதவிடும் வகையில், வாக்காளர்களிடம் நேரடியாக வருகைதரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது கைகளில் கடந்த 2002 மற்றும் 2005ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலினை உடன் கொண்டு வந்து, இப்படிவத்தினை நிரப்புவதற்கு உதவிடுவார்கள்.
கணக்கெடுப்பின் போது, வாக்காளரின் வீடு பூட்டியிருந்தாலும் அல்லது வெளியே சென்றிருந்தாலும் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் பெற்று பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வீட்டிற்கு வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் மூன்று அல்லது நான்கு முறை சென்று இப்பணியினை மேற்கொள்வார்கள்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டுப் படிவத்தில் ஒன்றினை தாங்கள் வைத்துக் கொண்டு, மற்றொன்றினை தங்களது வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் கணக்கீட்டுப் படிவத்திற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும். இந்த பணியானது வருகின்ற 04.12.2025 வரை நடைபெறும். எனவே, வாக்காளர்கள் எவ்வித பதற்றமுமின்றி தங்களது படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 04.12.2025க்குள் வழங்கிடலாம்.
இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி (BLO App) மூலமாக பதிவேற்றம் செய்யப்படும்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான கால அட்டவணை
வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் அனைத்தும் 04.12.2025-க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மீள பெறப்படும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். 09.12.2025 முதல் 08.01.2026 வரை பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல், 09.12.2025 முதல் 31.01.2026 வரை அறிவிப்பு காலம் விசாரணை மற்றும் சரிபார்த்தல், 07.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியினை சிறப்பாக முடித்திட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கிட, கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக கீழ்காணும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண். 1950
வாக்காளர்களுக்கு இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின், 1950 என்ற கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






