மோன்தா புயல்; மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புயல் காரணமாக தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை மறுதினம் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ’மோன்தா புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மோன்தா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படவேண்டும். கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கனமழையை கருத்தில் கொண்டு நீரில் மூழ்காதவகையில் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் மேடான பகுதியில் வைக்கப்பட வேண்டும். மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






