தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.

பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி உள்ளது. தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, இந்த ஆண்டில், தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடந்த 10-ந்தேதி வரையில் தீயணைப்புத் துறைக்கு 9 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் நிரந்தர பட்டாசு கடைகள் வைப்பதற்கு 2 ஆயிரத்து 751 விண்ணப்பங்களும், தற்காலிக கடைகள் அமைக்க 6 ஆயிரத்து 702 விண்ணப்பங்களும் வந்துள்ளன.

இதில் 6 ஆயிரத்து 630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்து 499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com