தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சீரான போக்குவரத்துக்காக வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நாளை (சனிக்கிழமை)மதியம் 2 மணி முதல் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்றடையலாம்.
காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல் 21 மற்றும் 22-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம். இரும்புலியூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கனரக வாகனங்கள் வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்து வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் சென்னை திரும்பும் பயணிகளுக்காக காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், பொத்தேரி ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. சாலை நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதனை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழித்தடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்து 19-ந் தேதி வரை 2,092 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சீரான போக்குவரத்துக்காக வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






