தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல்: மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது - 97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு..?

வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியிடுகிறார்.
சென்னை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 4-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வந்தது. நவம்பர் 30-ந்தேதி தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்தது. அதன்படி, டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.
இதனை தொடர்ந்து 2-வது முறையாக படிவங்களை திருப்பி வழங்க மேலும் 3 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் பகல் 2 மணிக்கு பதிலாக, மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள் முகவரி மாற்றியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். இப்படி நீக்கப்பட்டதற்கான காரணமும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






