உரிமையை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஆக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். டர்ப் தளம், மின் கோபுர விளக்குகள், கழிவறை, பார்வையாளர் அரங்கம் உள்ளிட்டவை மைதானத்தில் அமைகின்றன.
அதன்பின்னர் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
பட்டா என்பது வெறும் ஆவணம் கிடையாது. உங்கள் இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வ உரிமையாகும். உங்களுடைய உரிமையை நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று நிலைநாட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நிறைய திட்டங்களை முத-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த வாரம் கூட இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் அறிவிக்காத, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்டமசோதாவை, சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 15,000 மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர். நம்முடைய முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதால்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே 9.69% வளர்ச்சியோடு தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் விட முதலிடத்தில் உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள சகோதரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை இந்த அரசு கடன்தொகையாக பார்க்கவில்லை; உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைத் தொகையாகதான் நாங்கள் பார்க்கிறோம்.
புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது. திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவை அறிந்து செயல்படுவதுதான் திராவிட மாடல் அரசு. இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும், நீங்களும் இந்த அரசுக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.