தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் - கனிமொழி எம்.பி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், கனிமொழி எம்.பி தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை,
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்றது. திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு முடிந்த பின், கனிமொழி கருணாநிதி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை குழுவை உருவாக்கி உள்ளார். தேர்தல் அறிக்கை என்பது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், மகளிர் உரிமைகள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தை பாதுகாப்பது, விவசாயிகள் பாதுகாப்பு, ஒன்றிய அரசு மக்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பறிப்பதையே ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கும் இச்சூழலில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மாநில உரிமைகளுக்காகப் போராடுவது போன்ற அம்சங்கள் நிச்சயமாக தேர்தல் அறிக்கையின் மையமாக இருக்கும்." என்று பேசினார்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.






